playeroftheday

After the injury of Franck Ribery, @karimbenzema is called to be the leader of France in the World Cup. He showed his power with an amazing performance this weekend with two goals and one assist. He is @fury90_ player of the day. Double tap if he is in your #Fury90 squad. #france #football #soccer #wc2014 #worldcup #brazil2014 #brazil #best #bestoftheday #Karim #Benzema #challenge #fury90 #playeroftheday #fantasy #fantasyxi

உலகக்கோப்பை 2014 - முன்னோட்டம்

இங்கிலாந்து, ஸ்பெய்ன் இரண்டு தேசங்களிலும் கடைசி வார லீக் ஆட்டங்கள் மட்டும் மீதமிருக்கையில் எஃப்.ஏ கோப்பை இறுதியாட்டம், சேம்ப்பியன்ஸ் லீக் இறுதியாட்டம் என அடுத்த சில வார சரவெடிகளுக்குப் பின் வாணவேடிக்கையாக மிளிரத் தயாராக இருக்கிறது உலகக்கோப்பை. உலகக்கோப்பைக்கு இன்னும் சில வாரங்களே மீதமிருக்கையில், ஒவ்வொரு நாளும் ஒரு வீரரை ட்விட்டரில் சுருக்கமாகவும், டம்ப்ளரில் விரிவாகவும் அறிமுகம் செய்ய விருப்பம். இன்றைய விவாதம் ஸ்பெயின். விவாதங்கள் வரவேற்கப்படுகின்றன.

பிரபலமில்லாத நிறைய இளம் திறமைசாலிகளை இந்த உலகக்கோப்பையும் நமக்கு தரவிருக்கிறது. மரியோ கோட்சே, ஈடன் ஹஸார்ட், ஆக்ஸ்லேட் சேம்பர்லேன், நெய்மார், பால் போக்பா, லூகஸ் மோரா, ரஹீம் ஸ்டெர்லிங், தீபோ கோர்ட்வா, ரொமேலு லூகாகூ, தியாகோ ஆல்கந்த்ரா என இளம் நட்சத்திர ஆட்டக்காரர்களுக்கிடையே நிச்சயம் தம்மில் சிறந்தவர் யார் என்று ஆட்டத்துக்கு ஆட்டம் போட்டி நிலவும்.

ஸ்பெய்ன், ப்ரேசில், ஜெர்மனி - இம்மூன்று அணிகளும் கணிசமான ரசிகர்கள், வல்லுனர்களிடையே அரையிறுதிக்கு தகுதிபெறக்கூடிய அணிகளென ஏகோபித்த ஆதரவைப் பெற்றுள்ளன. நான்காவது அரையிறுதி இடத்தைப் பிடிக்கிற தேசம் ரொனால்டோ vs. மெஸ்ஸியில் முடிவு செய்யப்படலாம். அல்லது 2002ல் நுழைந்த கொரியாவைப் போல எதிர்பாராத திருப்பங்கள் நிகழலாம். குறிப்பாக பெல்ஜியம் அணியை நடுநிலையான ரசிகர்கள் தங்கள் ஆதர்சமாக கருதுகிறார்கள். தவறாமல் எதிர்பார்ப்புகளை பொய்யாக்கும் இங்கிலாந்து சோபிக்கலாம். உலகமே எதிர்நோக்கியிருக்கிறது.

கிரிக்கெட் உலகக்கோப்பையை இந்திய அணி சொந்த மண்ணில் வென்றது போல, ப்ரேசிலுக்கு தங்கள் நாட்டினரின் பெரும் துணையுடன் வெல்லும் வாய்ப்பு பிரகாசமாகத் தெரிகிறது. இதுவரைக்கும் தென்னமெரிக்க கண்டத்தில் நடைபெற்ற எல்லா உலகக்கோப்பைகளிலும் தென்னமெரிக்க தேசங்கள் மட்டுமே வெற்றி பெற்றிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்க தகவல்.

அரங்கேற்றிய நாடு - ஆண்டு - வெற்றி பெற்ற தேசம்

உருகுவாய் - 1930 - உருகுவாய்

பிரேசில் - 1950 - உருகுவாய்

1962 - சிலே - பிரேசில்

1970 - மெக்சிகோ - பிரேசில்

1978 - ஆர்ஜெண்டினா - ஆர்ஜெண்டினா

1986 - மெக்சிகோ - ஆர்ஜெண்டினா

2014 - பிரேசில் - ?

2010ல் வுவுஸெலா துணையுடன் கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட தென்னாப்பிரிக்க உலகக்கோப்பயைத் தொடர்ந்து இம்முறை ப்ரேசில். பாதாம் நிற அழகிகள், மலை மேல் இயேசப்பா, விழாக்கோலங்களின் தலைநகரம் ரியோ, கால்பந்தின் இருபெரும் கடவுள்களின் ஒருவரான பெலேவின் சொந்த தேசம். ஆமாம், தேங்காய் சீனிவாசன் குறிப்பிடும் ப்ளாக் பெர்லே தான்.

தொடர்ந்து இரண்டு யூரோ கோப்பைகளையும் கடந்த உலகக்கோப்பையையும் தன் வசம் வைத்திருக்கும் ஸ்பெய்ன் அணி ஆறாண்டுகளாக அசைக்க முடியாத சக்தியாகத் தான் பிரேசிலில் களமிறங்குகிறது. ஸ்பெய்னின் பாணியை ட்டிக்கி-டாக்கா (Tiki-Taka) என்று செல்லமாக அழைப்பர். தற்காப்புக் களம் (Defensive third), தாக்குதல் களம் (Attacking third), இரண்டிலும் மிகக்குறைவான நேரம் பந்தை இருக்க விடுவார்கள். களத்தின் நடுப்பகுதியில் - மத்திய களம் (Middle third) தான் பெரும்பாலும் பந்தைக் கடத்திக்கொண்டு இருப்பார்கள். டச்சு வீரரான யோஹான் க்ரயஃப் எனும் கால்பந்து மேதையால் உருவாக்கப்பட்டு நெதர்லாந்து அணியால் 70களில் ஆதிக்கம் செலுத்திய Total Football எனும் சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டது தான் இந்த ஆட்டமுறை. க்ரயஃப் தெற்கு ஸ்பெய்னிலுள்ள பார்சலோனா க்ளப் அணியின் மேலாளராகப் பொறுப்பேற்று 90களில் பார்சலோனாவின் ஜூனியர் அணி சிறுவர்களிடையே இதே ஆட்டமுறையை மெருகேற்றி பயிற்சி தந்தார். ஸ்பெய்ன் அணியில் பாதிக்கு பாதி பார்சலோனா வீரர்கள் இருந்தபடியால், இந்த ஆட்டமுறை அவர்களுக்கு தோதாக அமைந்துவிட்டது. Defence, Attack, Midfield என்றில்லாமல், அத்தனை ஆட்டக்காரர்களும் மோடிமஸ்தான் பந்து மாதிரி இடம் மாறிக்கொண்டே இருப்பார்கள். யார் எங்கு எப்போது நகர்வார்கள் என்று சொல்லவே முடியாது. ஆட்டநேரம் 90 நிமிடத்தில் குறைந்தது 60 நிமிடங்களாவது பந்தை கையக (காலகப்படுத்தி?) ப்படுத்தியபடியே முன்னேறுவார்கள். எதிரணி கண்ணயர்ந்த நிமிடத்தில் பந்து கோல் வலைக்குள் உதைத்தெறியப்படும். இது தான் ட்டிக்கி டாக்கா. கால்பந்து வரலாற்றின் மிகச்சிறந்த ஐந்து அணிகள் பட்டியல் எடுத்துப்பார்த்தால் அநேகம் பேரின் முதல் அல்லது இரண்டாவது தேர்வு இந்தத் தலைமுறை பார்சலோனா - ஸ்பெய்ன் அணியாகத் தான் இருக்கும்.

ஸ்பெய்னின் மிக முக்கிய வீரர்கள் - ஜாவி, இனியெஸ்டா. அவர்களது பொசிஷனில் இன்றைய தேதிக்கு போட்டியில்லாத மேதைகள். இவர்களுக்கு பக்கபலமாக செர்ஜியோ புஸ்கெட்ஸ் மற்றும் செஸ்க் ஃபேப்ரிகஸ். நாலு பேருமே பார்சலோனா. நகமும் சதையுமாய் ஒருவரின் நகர்தலை நிழலாய் அறிந்த கூட்டணி. இதுதான் ஸ்பெய்னின் மிகப்பெரும் பலம். சென்ற உலகக்கோப்பையை வென்ற கோல் இனியெஸ்டாவின் காலணியிலிருந்து விரைந்ததே. அந்த கோலை திறம்பட உருவாக்கியவர் செஸ்க். இம்முறை செஸ்க் அத்தனை அற்புதமான ஃபார்மில் இல்லை என்றாலும், இவர்களுக்கு மாற்றாக மத்திய களவீரர்கள் யுவான் மாட்டா (மான்செஸ்டர் யுனைட்டெட்), சாண்டியகோ கஸோர்லா (ஆர்செனல்), தாவீ சில்வா (மான்செஸ்டர் சிட்டி), இஸ்கோ (ரியல் மத்ரிட்), ஜாபி அலோன்சோ (ரியல் மத்ரிட்), இயேசு நவாஸ் (மேன்செஸ்டர் சிட்டி), கோகே (அத்லெட்டிகோ மத்ரிட்), ஹவி மார்டினேஸ் (பயர்ன் ம்யூனிக்), ஹவி கார்சியா (மான்செஸ்டர் சிட்டி). இன்னும் நான்கைந்து பேர் இருக்கலாம். இத்தனை பெரிய பட்டாளம். இதில் ஒவ்வொருத்தருமே ஸ்பெய்ன் அன்றி வேறெந்த நாட்டிலிருந்தாலும் சந்தேகமின்றி முதல் XI இடங்களுக்கு தகுதியானவர்களே. ஆனால், ஸ்பெய்ன் என்ற ஒரே காரணத்துக்காக, பெஞ்சில் சப்ஸ்டிட்யூஷனை எதிர்பார்க்கிற நிலைமை.

தாக்குதல் திறனைப் பொறுத்தவரை, ஃபெர்னாண்டோ டாரஸ் (செல்ஸீ), தாவீ வீயா (அத்லெட்டிகோ மத்ரிட்) இருவரின் கடைசி உலகக்கோப்பை இதுவாகத் தான் இருக்கும். வாழ்ந்து கெட்ட ஜமீந்தாரைப் போல இருவரும் பெரும் சொதப்பலாகத் தான் அண்மைய வருடங்கள் அமைந்திருக்கின்றன. குறிப்பாக 50 மில்லியன் பவுண்டுகளுக்கு லிவர்பூலிலிருந்து செல்ஸீ சென்ற டாரஸ் இரண்டு யூரோ இறுதிப்போட்டிகளிலும் கோல் போட்டிருந்தாலும், அவரை வைத்து ஆட்டத்தைத் துவக்க பயிற்சியாளர் டெல் போஸ்க்கெ விரும்ப மாட்டார். உச்சபட்ச ஃபார்மிலிருக்கும் டியெகோ கோஸ்டா (அத்லெட்டிகோ மத்ரிட்) அல்லது ஆல்வரோ நெக்ரீடோ (மான்செஸ்டர் சிட்டி) ஆட்டத்தை துவக்குவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

தற்காப்பைப் பொறுத்தவரைக்கும் புயோல் (பார்சலோனா) ஓய்வு அறிவித்தபடியால் பிக்கே (பார்சலோனா), ராமோஸ் (ரியல் மத்ரிட்), அஸ்பிலிக்வெட்டா (செல்ஸீ), ஜோர்டி ஆல்பா (பார்சலோனா) நால்வரும் தொடங்குவார்கள். துணைபுரிய பெஞ்சில் யுவான்ஃப்ரான் (அத்லெட்டிகோ மத்ரிட்), மோன்ரியால் (ஆர்செனல்), ஆல்பியால் (நாபொலி), பாத்ரா (பார்சலோனா). கோலைத் தடுக்க கல்லணையாக கசியாஸ் (ரியல் மத்ரிட்). புனித. இக்கர் கசியாஸ். அவர் சீக்குப்பட்டால் வால்டேஸ் (பார்சலோனா) அல்லது பெபெ ரெய்னா (நாபொலி). ராமோஸ் சமீபமாக அட்டகாசமான ஃபார்மிலிருக்கிறார். இத்தனை பலங்களையும் ஒருங்கிணையக் கொண்ட ஸ்பெய்ன் எந்த அணியாலும் வெல்ல முடியாத இரண்டு தொடர் உலகக்கோப்பைகளை வென்றெடுக்குமா? பின்னூட்டங்களிலோ ட்விட்டரிலோ உங்கள் கருத்துகளைப் பகிரலாம்.